×

சோதனைச்சாவடி வனச்சாலையில் சிதறிய கரும்பு துண்டுகளை ருசிக்க குட்டிகளுடன் வரும் யானைகள்

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அடுத்த காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே வனச்சாலையில் சிதறிய கரும்புத் துண்டுகளை திண்பதற்காக குட்டிகளுடன் உலா வரும் யானைகளால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதி வழியாக தமிழக - கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இச்சாலை வழியாக 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. யானை, மான், காட்டு மாடு உள்ளிட்ட வன விலங்குகள் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வது வழக்கம். இந்நிலையில் ஆசனூர் அடுத்த காரப்பள்ளம் சோதனைச்சாவடியில் அமைக்கப்பட்டுள்ள உயர தடுப்பு கம்பி அருகே கரும்பு பாரம் ஏற்றிய லாரிகள் செல்லும்போது தடுப்பு கம்பியில் கரும்பு உரசுவதால் அப்பகுதியில் கரும்புத் துண்டுகள் உடைந்து சிதறி சாலையில் விழுகின்றன.

இந்த கரும்பு துண்டுகளை சுவைப்பதற்காக யானைகள் குட்டிகளுடன் கூட்டம் கூட்டமாக சாலையில் முகாமிடுகின்றன. நேற்று மதியம் குட்டிகளுடன் அப்பகுதியில் முகாமிட்ட யானை கூட்டம் சுமார் அரைமணி நேரம் சாலை நடுவே நின்றுகொண்டு கரும்பு துண்டுகளை சுவைத்தபடி வாகனங்களுக்கு வழிவிடாமல் சாலையை மறித்து நின்றன. மேலும் யானைகளை கண்ட வாகன ஓட்டிகள் சாலையில் வரிசையாக வாகனங்களை நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  இந்நிலையில் சுமார் அரை மணி நேரம் கழித்து யானைகள் வனப் பகுதிக்குள் சென்ற பின் வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன. சோதனைச்சாவடி பகுதியில் யானைகள் உலா வந்ததால், சோதனைச்சாவடி பணியில் இருந்த போலீசார் மற்றும் வனத்துறையினர் அச்சமடைந்துள்ளனர்.

Tags : checkpoint forest , forest Elephants ,sugarcane pieces
× RELATED சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில்...